Thursday, May 9, 2013

ஆண் குழந்தைத் தாலாட்டு - பாரதிதாசன்

காராரும்  வானத்தில் காணும் முழு நிலவே 
நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே 
ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே 
ஓசை அளித்து மலர் உண்ணுகின்ற தேன்வண்டே 
உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என் மடியில் 
பிள்ளையாய் வந்துபிறந்த பெரும் பேறே
சின்னமலர் வாய் சிரித்தபடி பால் குடித்தாய் 
கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு
நீதி தெரியும் என்பார் நீள்கரத்தின் வாளேந்தி 
சாதி என்று போராடும் தக்கைகளின் நெஞ்சில் 
கனலேற்ற வந்த களிறே -எனது 
மனம் ஏறுகின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே
தேக்கு மரம் கடைந்து செய்ததொரு தொட்டிலிலே 
ஈக்கள் நுழையாமல்இட்டதொரு திரை  நடுவே 
பொன்முகத்திலே இழைத்த புத்தம் புது நீலச்  
சின்ன மணிக் கதவை இமைக் கதவால் மூடி வைப்பாய் 
அள்ளும் வறுமை தனை அகற்றாமல் அம்புவிக்கும் 
கொள்ளை நோய் போல் மதத்தைக் கூட்டி அழும் வைதிகத்தைப் 
போராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல் 
வேரோடு  பேர்க்க வந்த வீர இளம் வீரா
வாடப் பல புரிந்து வாழ்வை விழலாக்கும் 
மூடப் பழக்கத்தைத் தீதென்றால் முட்டவரும் 
மாடுகளைச் சீர் திருத்தி வண்டியிலே பூட்டவந்த 
ஈடற்ற தோழா இளம் தோழா கண்ணுறங்கு
எல்லாம் அவன் செயல் என்று பிறன் பொருளை 
வெள்ளம் போல் அள்ளி வழங்கும் வீணருக்கும் 
காப்பார் கடவுள் உம்மைக் கட்டையில் நீர் போகுமட்டும் 
வேப்பீர் உழைப்பீர் என்றுரைக்கும் வீணருக்கும் 
மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த 
தேனின் பெருக்கே என் செந்தமிழே  கண்ணுறங்கு

பெண் குழந்தைத் தாலாட்டு - பாரதிதாசன்

சோலை மலரே ஸ்வர்ணத்தின் வார்ப்படமே 
காலை இளம் சூரியனைக் காட்டவந்த பெண்ணழகே
வன்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெமையினால் உண்டென்று பேச வந்த பெண்ணழகே
நாயென்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவியில்
தாயென்று பெண்ணைத் தமிழர்க்குக் காட்ட வாய்த்தவளே
வெண்முத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும் 
கண்கள் உறங்கு கனியே உறங்கிடுவாய்
அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்து
சின்ன உடலாகச் சித்தரித்த மெல்லியளே
மின்னல் ஒளியே விலை மதியா இரத்தினமே
கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே
வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்கைத் துலங்கும் பெருமாட்டி
புண்ணில் சரம் விடுக்கும் பொய் மதத்தின் கூட்டத்தை
கண்ணில் கனல் சிந்திக் கட்டழிக்க வந்தவளே
தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
உய்விக்க வந்த உவப்பே பகுத்தறிவே
எல்லாம் அவன் செயல் என்று துடை நடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமை செய்ய வந்தவளே
வாயிலிட்டுத் தொப்பை வளர்க்கும் சாதிக் கிடங்கைக்
கோயிலென்று காசு தரும் கொள்கை தவிர்ப்பவளே
சாணிக்குப் பொட்டிட்டு சாமிஎன்பார் செய்கைக்கு
நாணி உறங்கு நகைத்து நீ கண்ணுறங்கு