Sunday, January 4, 2009

வறுமையில் வாடும் தாயின் தாலாட்டு

சாலை வழி யுறங்க சமுத்திரத்தில் மீன் தூங்க
நாடெல்லாம் தூங்க நடு கழனி நெல் தூங்க
பாலில் பழம் தூங்க பாதி நிலா தான் தூங்க
வண்டுகள் கவி பாட மரங்கள் நடமாட
செண்டுகள் ஆட தேசத்தார் கொண்டாட
ஆடுமாம் தூளி அசையுமாம் பொன்னூஞ்சல்
மண்ணிலொரு புன்னை மரம் வருசமொரு பூப்பூக்கும்
வருந்தி ஒரு காய் காய்க்கும் என்னையான்
புன்னை மரம் இலை உதிரப் பிஞ்சு விடும்
முத்துச் சிரிப்பழகா முல்லைபூப் பல்லழகா
வெத்துக் குடிசயிலே விளையாட வந்தனையோ
பச்சரிசி சோளம் பாதி நாள் பட்டினிதான்
பசும்பால் கொடுத்து உந்தன் பசி தீர்க்கப் பார்த்தாலும்
பருத்தி விதை இல்லையடா பசுப் பால் தரலையடா
ஆட்டுப் பால் ஊட்டி உன்னை அதிகரிக்கப் பார்த்தாலும்
ஆடு கடிக்கும் மரம் அத்தனையும் மொட்டையடா
பிள்ளைப் பால் ஊட்டி உன்னை போஜனைகள் செய்திடவே
கொள்ளை யுத்தம் பஞ்சம் கொடும்பாவி ஆனேண்டா
தொட்டால் பிசுக்கொட்டும் துணி மூட்டைத் தையலிட்டு
தொட்டில் கட்டித் தாலாட்ட தூக்கமும் வருமோடா
உன்னைப் போல் செல்வனை நான் உலகெங்கும் கண்டதில்லை
என்னைப் போல் ஏழையை நீ எங்காச்சும் கண்டதுண்டா

No comments: