Sunday, January 4, 2009

தாலாட்டு

தூரிக்கழுதவனோ என் கண்ணே துணையிருக்க வந்தவனோ
ஆரிக்கழுதவனோ என் கண்ணே ராமருக்கு மூத்தவனோ
தூரி துவண்டாடும் என் கண்ணே தும்புலிமான் செண்டாடும்
சென்டாடப் பந்தாட என் செல்வமகன் விளையாட
பந்தாடச் செண்டாட என் கண்ணே நீ பாலகனாய் விளையாட
நீ பிடித்து விளையாட என் கண்ணே உன் மாமா புள்ளி மான் கொண்டு வர
நீ மகிழ்ந்து விளையாட என் கண்ணே உன் மாமா மான் வேட்டையாடி வர
நீ கட்டி விலையாட உன் மாமா கவரிமான் கொண்டு வர
தூங்காத கண்ணுக்கு என் கண்ணே துரும்பு கொண்டு மையெழுதி
உறங்காத கண்ணுக்கு என் கண்ணே நான் ஓலை கொண்டு மையெழுதி
மையெழுதிப் பொட்டெழுதி உன் மாமன் மார் பேரெழுதி
பொட்டெழுதி மையெழுதி உன் பாட்டன்மார் பேரெழுதி
ஆடும் கிளி ரெண்டேழுதி உன் அத்தைமார் பேரெழுதி
பேசும் கிளி ரெண்டேழுதி உன் பெரியப்பா பேரெழுதி
சிரிக்கும் கிளி ரெண்டேழுதி உன் சித்தப்பா பேரெழுதி
மயக்கும் கிளி ரெண்டேழுதி உன் மாமன் பேரெழுதி
சீராரும் எங்கள் குலச் சிகாமணியே கண்வளராய்
கொட்டி வைத்த முத்தே கோதிலா ரத்தினமே
கட்டிப் பசும் பொன்னே கண்மணியே கண்வளராய்
அழ வேண்டாம் அழஅவேண்டாம் என் கண்ணே நீ அழஅவேண்டாம்
கண்ணுறங்கு கண்ணுறங்கு காசினியில் மன்னவனே கண்ணுறங்கு
வண்ணச் சிறு தொட்டிலிலே வள்ளலே கண்ணுறங்கு
மாற்றறியாப் பசும் பொன்னே மாணிக்கமே கண்ணுறங்கு
ஏற்ற நல்ல புது மலரே என்னரசே கண்வளராய்
மாணிக்கத் தொட்டிலிலே மன்னவனே கண்ணுறங்கு
துறைமுகத்தில் வர்த்தகம் செய் துறையன்னார் உன் மாமா
எண்கோடி திரவியங்கள் திரட்டி வைப்பார் கண்வளராய்
உன் அப்பா மணம் மகிழ உன் அம்மா மணம் குளிர
மண்ணுலகில் வந்துதித்த மணியே கண்ணுறங்கு
ஆறிரண்டும் காவேரி அதனடுவே ஸ்ரீரங்கம்
சாமி ரெண்டு கையினால் தந்த எந்தன் சீதனமே
கங்கை யமுனை ஸ்ரீநாதன் கருணையினால் என் வயிற்றில்
மங்கலமாய் வந்துதித்த மணியே கண்வளராய் .

மாணிக்கம் வயிரம் இடை கட்டி ஆணிப் பொன்னால் செய்த
தங்கம் கடைந்தல்லோ என்னையா தமருள்ள தொட்டில் கட்டி
பொன் கடைந்த தொட்டிலிலே போட்டாடும் பாலகனோ
வாங்கு மணி வாங்கிட என் கண்ணே வயிரமனிக் கால் நிறுத்தி
தூங்குமனித் தொட்டிலிலே தூங்கிட என் கண்ணே
துறை மகனே தூங்கிடப்போ
வண்ணச் சிறு தொட்டிலிலே வள்ளலே தூங்கிடப்போ
வெள்ளித் துறடு வெளுக்கத் தேய்ச்சு
பொன்னின் துறடு போடி துடைக்க
அதிலறு கோணம் முல்லைப் பூவு
செடி செடியாய்ப் பூவெடுத்து என் கண்ணே
செண்டு செண்டாய் மாலை கட்டி
பொன்னூசி கொண்டல்லோ என் கண்ணே
பொறுத்திடுவேன் பூமாலை
பொன்னுரைத்துப் பொட்டுமிட்டு என் ஐயனுக்கு
பொழுதறிந்து மாலை இட்டு
மாலை அணிந்து வரும் என் ஐயனுக்கு
மான் குயிலோ பாடி வரும்
காட்டானை முன் நடக்க கரடி புலி பின் நடக்கும்
தூங்கடா நல்ல கண்ணு என் செல்வமே தூக்கமுள்ள தொட்டிலிலே
உறங்கட நல்ல கண்ணு என் தங்கமே உரக்கமுள்ள தொட்டிலிலே
வெள்ளிகிழ்மையிலே என் கண்ணே விடிய ஐந்து நாழிகைக்கு
அடுப்பை மெழுகியல்லொ என்னையா அணியணியாய்க் கோலமிட்டு
பாலால் உலை இறக்கி என் செல்வமே பச்சரிசிப் பொங்கலிட்டு
கடலைப் பருப்புடைத்து என் செல்வமே கற்பூரச் சோறாக்கி
பார்த்து முகமருந்த என் கண்ணே நீ பசியில்லை என்றாயே
ஆரடித்தார் என் செல்வமே அழுது முறை கொண்டு வந்தாய்
பாட்டி அடித்தொரோ பால் வார்க்கும் சங்காலே
தாத்தா அடித்தாரோ பசுமூங்கில் தடியாலே
அத்தை அடித்தாளோ அரளிப்பூச் செண்டாலே
மாமா அடித்தாரோ மல்லிகைப் பூச் செண்டாலே
தொட்டாரைச் சொல்லி அழு
தோள் விலங்கு போட்டிடுவோம்
மண்ணு விலங்கு பண்ணி
தண்ணியிலே போட்டிடுவோம்
வெண்ணை விலங்கு செய்து
வெயிலிலே போட்டு வைப்போம்
யாரும் அடிககவில்லை அம்மா
ஐ விரலால் தீண்டவில்லை
தானாய் அழுது வந்தேன் வம்புக்கு அழுது வந்தேன்
யாரும் அடிககவில்லை அம்மா
ஐ விரலால் தீண்டவில்லை
தானாய் அழுது வந்தேன் தாயார் மடிதேடி
கொல்லத்து வெல்லமும் கோதிலா மாங்கனியும்
கோடைப் பலாவும் குலை சேர்த்த வாழையும்
அக்கரையில் சர்க்கரையும் அதிமதுரத் தென்னவேட்டும்
காய்ச்சிய பாலும் கற்கண்டும் தெளிதேனும்
ஏலங்கிராம்பும் இளங்கொடிக்கால் வெற்றிலையும்
சாதிக் களிப்பாக்கும் சங்கு வெள்ளை சுண்ணாம்பும்
அத்தனையும் கொண்டுன்னை அறிய வந்தார் அம்மான்மார்
கண்ணான கண்ணுக்கு காத்து குத்தப் போகுதுன்னு
முன்னூறு கோட்டையிலே முதற் கோட்டை நெல்லேடுத்து
நானூறு கோட்டையிலே நடுக் கோட்டை நெல்லேடுத்து
குத்துமென்பார் பச்சரிசி கொழிக்கு தென்பார் காப்பரிசி
கொல்லத்து வெல்லமும் கொதிலாச் சர்க்கரையும்
எள்ளும் கழுவிவிட்டு இலந் தேங்காய் கீறலிட்டு
பட்ட மரம் தழைக்க அழகு கண்டார்க்கு
பல கனிகள் தான் சொறிய
கரடி கவி பாட அழகு கண்டார்க்கு
கண்ட புலி தெண்டனிட ;
கறக்க நல்ல பால் மாடு
வேட்டை நாய் காவலுமோ அழகு கண்டார்க்கு
வேங்கைப் புலி காவலுமோ
அழுதால் அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதறும்
அந்நாக்கும் தேனோ அடிநாக்கும் சர்க்கரையோ
உன் நாக்கின் கீழே ஊரும் அமிழ்தமதோ

No comments: